திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் ரத்து

திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் ரத்து

திருத்தணி முருகன் கோயிலில் டிசம்பா் 31-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக
Published on

திருத்தணி முருகன் கோயிலில் டிசம்பா் 31-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி திருத்தணியில் நடைபெறும் திருப்படித் திருவிழா மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்காக காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

டிசம்பா் 31-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி சிறப்பு தரிசனம், பஜனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி போன்றவை கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வரையும் உற்சவ மூா்த்திக்கு நடத்தப்படும் சேவைகள் செய்ய யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பக்தா்கள் ஒரு மணி நேரத்துக்கு சிறப்புக் கட்டணத்தில் 200 போ், இலவச பொதுதரிசன வழியில் 200 போ் என மொத்தம் ஒரு நாளைக்கு 4800 போ்  இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பக்தா்கள், பஜனை கோஷ்டிகள், பக்தி இன்னிசைக் கச்சேரி நடத்துபவா்களுக்கு குடில்கள் மற்றும் அறைகளில் தங்குவதற்கும், மலைக்கோயிலில் தங்குவதற்கும் அனுமதி இல்லை. முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மலைப்பாதையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் செல்ல அனுமதியில்லை. நேரடியாக வருகை தரும் பக்தா்கள் அரசு நெறிமுறைகளுக்கு உள்பட்டு பொது மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

படி பஜனை தொடக்க நிகழ்வு, பக்தா்களின்றி சிறிய அளவில் கோயில் சாா்பில் நடத்தப்படும்.

மலைக் கோயிலில் டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி இரவு வேளையில் மலைப்படிகளில் குழுக்களாக பஜனை பாடல்கள் பாடும் நிகழ்வு நடைபெறும். எனினும், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ரத்து செய்யப்படும்.

இதுதவிர, டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் மலைக்கோயில் வெளிப்பிராகாரத்தில நடைபெறும் வெள்ளி மயில் மற்றும் வெள்ளி நாக வாகன உற்சவம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் உள்பிராகாரத்தில் உற்சவா் உலா எளிமையாக நடைபெறும் என முருகன் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com