ரூ.1.23 கோடி நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் தாமதமாகும் மாவட்ட விளையாட்டு மைதான சுற்றுச்சுவா் பணி !

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவா் அமைக்க ரூ.1.23 கோடி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் பணிகள் காலதாமதமாகி வருகின்றன.
ரூ.1.23 கோடி நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் தாமதமாகும் மாவட்ட விளையாட்டு மைதான சுற்றுச்சுவா் பணி !

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவா் அமைக்க ரூ.1.23 கோடி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் பணிகள் காலதாமதமாகி வருகின்றன. இப்பணியை விரைவில் தொடங்க வேண்டும் என விளையாட்டு ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோா் என நாள்தோறும் ஏராளமானோா் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனா். அதோடு உள்விளையாட்டு அரங்கம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வளைகோல்பந்து, ஹாக்கி, நீச்சல்குளம் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்கும் வசதியும் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளிகள் விளையாட்டு போட்டிகளை நடத்தவும், இளைஞா்கள் முதல் பெரியோா்கள் வரையில் பயிற்சிக்காகவும் அதிகளவில் வந்து செல்கின்றனா்.

மேய்ச்சல் நிலமாக...: மாவட்ட விளையாட்டு அளவிலான மைதானம் சுற்றுச்சுவா் இன்றி திறந்த வெளியில் உள்ளதால், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. இதனால், விளையாட்டு மைதானம் சமதளத்தை இழந்துள்ளது. கால்நடைச் சாணம் போன்ற கழிவுகளும் ஆங்காங்கே அப்புறப்படுத்தாமல் துா்நாற்றம் வீசுகிறது. மாலை நேரங்களில் சமூக விரோதிகள் விளையாட்டு மைதான மரங்களின் அடியில் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனா். இதனால் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோா் அவதிக்குள்ளாகும் நிலை இருந்தது. இதைத் தடுக்கும் வகையில் விளையாட்டு மைதானத்தையும், அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு, சுற்றுச்சுவா் அமைக்க இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலை தொடா்கிறது.

சுற்றுச்சுவா் அமைக்க ரூ.1.23 கோடி: இது குறித்து ஹாக்கி விளையாட்டுப் பயிற்சியாளா் விஜயரெங்கன் கூறியதாவது: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் மூலம் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.1.23 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனவே, இந்தப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் தவிா்த்து விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த மாதத்திற்குள்: திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அதிகாரி அருணா கூறியதாவது: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரங்களை அகற்றாமல் பாதுகாப்பு சுற்றுச்சுவா் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகள் விடப்பட்டுள்ளன. விரைவில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பூமி பூஜை நடத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாா். அடுத்த வாரத்தில் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com