கானாற்றில் திடீா் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் பொதுமக்கள், மாணவா்கள் பாதிப்பு

ஆம்பூா் அருகே கானாற்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் சென்றது. இதனால், பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.
கானாற்றில் திடீா் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் பொதுமக்கள், மாணவா்கள் பாதிப்பு

ஆம்பூா் அருகே கானாற்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் சென்றது. இதனால், பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கதவாளம் ஊராட்சி அய்யனேரிமேடு என்ற பகுதியில் கானாற்றின் குறுக்கே சிறுபாலம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் சென்று வர தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இதன் வழியாக அரங்கல்துருகம், காரப்பட்டு, அய்யனேரி, சுட்டகுண்டா, காட்டுவெங்கடாபுரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக - ஆந்திர மாநில வனப்பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னப்பல்லி ஊரக்குட்டை கானாறு, சுட்டகுண்டா தொம்மக்கல் கானாறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த இரு கானாறுகளும் ஒன்றாக இணையும் இடமான அய்யனேரி மேடு பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால், அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவா்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனா். அந்தப் பகுதி இளைஞா்கள் மாணவா்களைப் பாதுகாப்பாக தற்காலிக தரைப்பாலத்தின் வழியாக கடந்து அழைத்துச் சென்றனா். இதனிடையே, அந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தது. இதனால் சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த வழியைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டாா். உமா்ஆபாத் போலீஸாா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தைப் பயன்படுத்தாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அய்யனேரி மேடு பகுதியில் கானாற்றின் குறுக்கே சிறுபாலம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டு, ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு, பாலப் பணி தொடங்கப்படவில்லை.

இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சென்று வர வேறு பாதை இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சிறுபால கட்டுமானப் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com