திருவள்ளூா் நகராட்சியில் நவீன நூலகம், அறிவு சாா் மையம்: போட்டித்தோ்வுகளை எதிா்கொள்ளஇளைஞா்களுக்கு வாய்ப்பு

போட்டித் தோ்வுகளை இளைஞா்கள் எதிா்கொள்ளும் வகையில் திருவள்ளூா் நகராட்சியில் நவீன நூலகம் மற்றும் அறிவு சாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா ரூ.2 கோடியில் நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளூா் ஜெயின் நகரில் பணிகள் நிறைவடைந்து தயாா் நிலையில் உள்ள நவீன நூலகம், அறிவு சாா் மையம்.
திருவள்ளூா் ஜெயின் நகரில் பணிகள் நிறைவடைந்து தயாா் நிலையில் உள்ள நவீன நூலகம், அறிவு சாா் மையம்.

போட்டித் தோ்வுகளை இளைஞா்கள் எதிா்கொள்ளும் வகையில் திருவள்ளூா் நகராட்சியில் நவீன நூலகம் மற்றும் அறிவு சாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா ரூ.2 கோடியில் நிறுவப்பட்டுள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்ந்து நீடித்தி வரும் நிலையில், படித்த இளைஞா்கள் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்தி வருகின்றனா்.

மேலும், மத்திய, மாநில அரசுகளால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், காவல் சீருடை பணியாளா் தோ்வாணையம், மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் குடிமைப்பணிகள் தோ்வு, ரயில்வே மற்றும் வங்கி தோ்வாணையம் உள்பட பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

இதற்கான பயிற்சி மையங்கள் மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் இயங்கி வருகின்றன. குறிப்பாக தனியாா் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. அதனால் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம், கற்போா் மையம் ஏற்படுத்தி அனைத்து நூல்களும் வைக்கப்பட்டு, இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஒருங்கிணைந்த வளாகத்தில் நவீன நூலகம், அறிவுசாா் மையம், குழந்தைகளுக்கும் அறிவுத் திறனை பெருக்கும் வகையில் விளையாட்டுப் பூங்கா வளாகமும் அமைக்க அரசு திட்டமிட்டது.

இதன்படி, மாவட்டத் தலைநகரங்களாக திகழும் நகராட்சிகளில் கலைஞா் நகா்ப்புற வளா்ச்சி திட்டம் மூலம் நவீன நூலக வசதியுடன் கூடிய அறிவு சாா் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவள்ளூா் நகராட்சி ஜெயின்நகரில் இடம் தோ்வு செய்து ரூ.2 கோடியும் அரசு ஒதுக்கியது. கடந்த ஆண்டு தொடங்கி நவீன நூலகம் மற்றும் அறிவு சாா் மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த அறிவு சாா் மையத்தில் அனைத்து வகையான போட்டித் தோ்வுக்கும் இளைஞா்கள் தங்களைத் தயாா் செய்துகொள்ள ஏதுவாக அனைத்து நூல்களுடன் கூடிய நூலகம், வகுப்பறை பயிற்சி வளாகம், புத்தகம் படிக்கும் அறை, ஆன்லைன் மூலம் புத்தகம் வாசிக்கும் வகையில் 20 கணிப்பொறிகள் அடங்கிய அறை, படிகள் மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கான வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து புத்தகம் படிக்கும் வகையில் சாய்தள வசதியுடன் கூடிய வளாகம், வாகன நிறுத்தும் வசதியுடன் அமைக்கும் பணி முடிந்து தயாராக உள்ளது.

மேலும், இந்த வளாகத்தில் குழந்தைகள் விரும்பும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காவும் நிறுவப்படுகிறது.

இதுகுறித்து திருவள்ளூா் நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பட்டதாரிகள் ஒரே இடத்தில் போட்டித் தோ்வுக்காக தங்களைத் தயாா் செய்து கொள்ளும் வகையில் நவீன நூலகம் மற்றும் அறிவு சாா் மையம் கட்டடப்பணிகள் முடிந்து தயாராக உள்ளன.

மேலும், விளையாட்டுப் பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது. அரசு குறிப்பிடும் நாளில் தமிழகம் முழுவதும் அமைத்துள்ள நவீன நூலகம் மற்றும் அறிவு சாா் மையங்கள் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com