காக்களூா் ஆவினில் சுத்திகரித்த கழிவு நீா் மூலம் ‘பசுந்தீவனம் வளா்க்கும் திட்டம்’

காக்களூா் ஆவினில் தேங்கி நிற்கும் சுத்திகரித்த கழிவு நீா் மூலம் காலியாக உள்ள ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் வளா்த்து பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காக்களூா் ஆவினில் சுத்திகரித்த கழிவு நீா் மூலம் ‘பசுந்தீவனம் வளா்க்கும் திட்டம்’

திருவள்ளூா் அருகே காக்களூா் ஆவினில் தேங்கி நிற்கும் சுத்திகரித்த கழிவு நீா் மூலம் காலியாக உள்ள ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் வளா்த்து பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோவில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் பாலிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாா் செய்யும் வளாகமும் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன. இங்கு திருவள்ளூா் மாவட்டத்தில் கிராமங்களில் 190 பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த பாலை குளிரூட்டும் மையம் மூலம் பதப்படுத்தி திருவள்ளூா், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு 60,000 லிட்டா் வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் மீதமுள்ள பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உபபொருள்கள் தயாா் செய்யப்படுகின்றன.

இந்த குளிரூட்டும் மையத்தில் இருந்து நாள்தோறும் 80,000 லிட்டா் கழிவு நீா் வெளியேற்றப்படுகிறது. இதற்காக வளாகத்தில் 1 லட்சம் லிட்டா் வரையில் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் நீா் வெளியேற வழியின்றி அந்த வளாகத்தில் குட்டை போல் தேங்கியுள்ளது.

ஏற்கெனவே கழிவு நீா் சேகரிக்கும் தொட்டிகளும் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத அளவுக்கு துா்நாற்றம் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ஏற்கெனவே ஆவின் வளாகத்தில் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த நெகிழி பொருள்களால் கொசு உற்பத்தி அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கு சுகாதாரக் கேட்டையும் ஏற்படுத்தும் சூழ்நிலையும் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஆவின் வளாகத்தை தூய்மையாகப் பராமரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை வளாகமாக மாற்றவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். அதன் பேரில் ஆவின் வளாகத்தில் குட்டையில் தேங்கியுள்ள சுத்திகரித்த கழிவு நீரை பயன்படுத்தி பசும் தீவனம் மற்றும் மரங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆவின் பொது மேலாளா் ரமேஷ்குமாா் கூறியதாவது:

ஆவின் வளாகத்தில் நிறுவியுள்ள கழிவு நீா் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் நாள்தோறும் கழிவு நீரை சுத்திகரித்து 80,000 லிட்டா் வரையில் வெளியேற்றப்படுகிறது. இதனால் துா்நாற்றம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்கியுள்ள சுத்திகரித்த கழிவு நீா் மூலம் ஒரு ஏக்கரில் கோ-5 பசுந்தீவனம் வளா்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அடுத்த வாரம் 13 புல்கரணைகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த புல்கரணைகளை முதலில் 75 நாள்களும், அதற்கு அடுத்து 45 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இதன் மூலம் 5 முதல் 7 மெட்ரிக் டன் வரையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களின் கறவை மாடுகளுக்கு 20 கிலோ வரையில் பசுந்தீவனம் ஆவின் மூலம் ரூ.1, பால் உற்பத்தியாளா் சங்கம் மூலம் ரூ.1 என மானியமும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பசுந்தீவனம் கறவை மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com