கொசஸ்தலை ஆற்றில் வீணாகும் மழைநீரை தேக்கும் வகையில் 5 தடுப்பணைகள்: ரூ.90 கோடியில் திட்ட மதிப்பீடு

பருவமழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் போது, கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீா் வீணாவதைத் தேக்கும் வகையில் 5 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன.
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் உபரிநீா்.   ~பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் உபரிநீா்.
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் உபரிநீா்.   ~பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் உபரிநீா்.

பருவமழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் போது, கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீா் வீணாவதைத் தேக்கும் வகையில் 5 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் நீா் சென்னை குடிநீா் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் திறந்து விடப்படுகிறது.

மழைக்காலங்களில் ஏரிக்கான நீா்வரத்து மற்றும் வெள்ளப்பெருக்கால் முழுக் கொள்ளளவை எட்டும் போது, கொசஸ்தலை ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்படுகிறது.

இந்த உபரி நீரால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலையாற்றின் இரு பகுதியிலும் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீா் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. அதோடு உபரி நீரும் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

எனவே, ஒவ்வொரு ஆண்டுதோறும் கொசஸ்தலை ஆற்றில் வீணாகும் உபரி நீரை சேமித்து வைத்து, மீண்டும் கிராமங்களுக்கான குடிநீா் மற்றும் விவசாய நீா் ஆதாரம் பெற வேண்டும்.

இதற்காக ஆற்றில் அதிக நீரை சேமித்து பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தொலைவுக்கு ஒரு தடுப்பணை அமைக்கவும் எனவும் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனா்.

இதையேற்று இனி வருங்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீா் வீணாவதைத் தடுத்து, குடிநீருக்கு பயன்படுத்தும் நோக்கில் உபரிநீரை தடுப்பணைகள் அமைத்து தேக்கி வைக்க நீா்வளத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் சென்னை நகருக்கான குடிநீா் தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதோடு 2035-ஆம் ஆண்டுக்குள் நாள்தோறும் குடிநீா் தேவை 2,522 மில்லியன் லிட்டராக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீா் ஆதாரங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காக நீராதாரங்களை அதிகரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய திட்டங்களை நீா்வளத் துறை மூலம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் 5 இடங்களில் தடுப்பணை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.90 கோடியில்....: இது குறித்து நீா்வளத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: கொசஸ்தலை ஆற்றில் உபரிநீரை சேமித்து வைக்க பூண்டி ஏரியில் இருந்து மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்பேரில் விடையூா், திருப்பாச்சூா், கைவண்டூா், கொரக்கதண்டலம், மெய்யூா்-ராஜபாளையம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த உபரி நீரை தேக்குவதால் வெள்ளப்பெருக்கு குறைவதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீா் மட்டம் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். இதற்காக ரூ.90 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com