18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத பேரம்பாக்கம் கூவம் ஆற்றுத் தரைப்பாலம்

திருவள்ளூா் அருகே 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கூவம் ஆற்றின் தரைப்பாலத்தால் 2 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
போக்குவரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் உள்ள கூவம் தரைப்பாலம்.
போக்குவரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் உள்ள கூவம் தரைப்பாலம்.

திருவள்ளூா் அருகே 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கூவம் ஆற்றின் தரைப்பாலத்தால் 2 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய ஊராட்சி பேரம்பாக்கம். இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தைச் சுற்றிலும் இருளஞ்சேரி, நரசிங்காபுரம், கொண்டஞ்சேரி சிவபுரம், மாரிமங்கலம், கூவம், குமரச்சேரி, மப்பேடு உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கிருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், பஜாா், மின்சாரம் வாரியம், சாா் பதிவாளா் அலுவலகம், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு கூவம் தரைப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதமடைந்தது. இதையடுத்து இந்த பழைய தரைப்பாலத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதிதாக மேம்பாலமும் அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சரக்கு வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் போன்ற கனரக வாகங்கள் மட்டுமே புதிய பாலத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோா் பழைய தரைப்பாலத்தையே பயன்படுத்தி வந்தனா். தற்போது பழைய தரைப்பாலம் மிகவும் சேதமடைந்து வாகன போக்குவரதுக்கு பயன்பாடதற்ாக உள்ளது. அதனால், வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கிழக்கு பக்கம் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆற்றுக்குள் இறங்கி நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.

மேலும், 30 கிராமங்களைச் சோ்ந்தவா்களும் 2 கி.மீ தூரம் சுற்றி புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதற்கிடையே சேதமடைந்த தரைப்பாலம் குப்பைகள் கொட்டுமிடமாக மாறி விட்டது. இவை அனைத்தும் ஆற்றுக்குள் விழுவதால் துா்நாற்றம் வீசும் பகுதியாக உள்ளது. எனவே தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலரும் மற்றும் லயன்ஸ் கிளப் நிா்வாகியுமான சேகா் கூறியதாவது: இந்த தரைப்பாலம் சேதமடைந்த நிலையிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். அதனால் தரைப்பாலத்தை சீரமைக்க கோரி மாவட்ட நிா்வாகம், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பல்வேறு தடவை மனு அளித்துள்ளோம்.

ஆனால், கடந்த 18 ஆண்டுகளாக தரைப்பாலத்தை சீரமைக்க எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள வந்த சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினரிடமும் தரைப்பாலத்தை சீரமைக்க மனு அளித்துள்ளோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com