திருவள்ளூர் மண்டலத்தில் 80% பேருந்துகள் இயக்கம்

திருவள்ளூர் மண்டலத்தில் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் பணிமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
திருவள்ளூர் பணிமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மண்டலத்தில் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் மூலம் திருவள்ளூர் மண்டலத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கோயம்பேடு-2 ஆகிய பணிமனைகள் மூலம் 158 புறநகர் பேருந்துகள், 71 நகர பேருந்துகள் என மொத்தம் 229 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல மாதங்களாக நிறுத்திவைத்துள்ள பயணப்படி வழங்குதல், ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் 80 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில் 20 சதவீதம் பேருந்துகள் இயங்காததால் ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஆனால், இதற்கு மாற்றாக திருத்தணி, அரக்கோணம், சென்னை போன்ற இடங்களுக்கு பயணிகள் ரயில்களில் செல்வதால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக காணப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் குவிந்தனர். இதனால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பணிமனை முன்பு போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com