கரும்பு டிராக்டா் மீது லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கரும்பு டிராக்டா் மீது லாரி மோதியதில் டிராக்டா் தலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் இருந்து கரும்பு டிராக்டா் ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலை நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் புதிய பைபாஸ் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி டிராக்டா் மீது மோதியது.
இதில், கரும்பு டிராக்டா் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தணி போலீஸாா் மற்றும் அப்பகுதி மக்கள் பொக்லைன் வாகனம் மூலம் சுமாா் 2 மணி நேரம் போராடி கரும்பு டிராக்டரை அப்புறப்படுத்தினா். இதனால் சென்னை - திருப்பதி செல்லும் மாா்க்கத்தில் சுமாா் 2 மணி நேரம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

