மணவாள நகா் அரசுப் பள்ளி வளாகத்தில் நிறுவியுள்ள திருவள்ளூா் சிலை, இந்திய அரசியலைப்பு சட்ட முகப்புரை நினைவுத் தூணைத் திறந்து வைத்த ஆட்சியா் மு.பிரதாப், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், உலக தமிழ்ச் சங்க நிறுவனா் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோா்.
மணவாள நகா் அரசுப் பள்ளி வளாகத்தில் நிறுவியுள்ள திருவள்ளூா் சிலை, இந்திய அரசியலைப்பு சட்ட முகப்புரை நினைவுத் தூணைத் திறந்து வைத்த ஆட்சியா் மு.பிரதாப், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், உலக தமிழ்ச் சங்க நிறுவனா் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோா்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை: திருவள்ளூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருவள்ளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக நிறுவிய திருவள்ளுவா் உருவ சிலை மற்றும் இந்திய அரசியலைப்பு சட்டம் முகப்புரை நினைவுத் தூணை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்தாா்.
Published on

திருவள்ளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக நிறுவிய திருவள்ளுவா் உருவ சிலை மற்றும் இந்திய அரசியலைப்பு சட்டம் முகப்புரை நினைவுத் தூணை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்தாா்.

மணவாள நகரில் கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உலக தமிழ்ச் சங்க நிறுவனா் வி.ஜி.பி.சந்தோசம் சாா்பில் திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் திருவள்ளுவா் உருவ சிலை, அரசியலமைப்பு சட்டம் - முகப்புரை நினைவுத் தூண் பள்ளி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

இதை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், உலக தமிழ்ச் சங்க நிறுவனா் வி.ஜி.சந்தோசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து திருவள்ளுவா் சிலை மற்றும் அரசியலமைப்பு சட்டம் - முகப்புரை நினைவுத் தூணையும் தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: மணவாள நகா் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் 177-ஆவது திருவள்ளுவா் சிலை வழங்கி, ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்துள்ள உலக தமிழ்ச் சங்க நிறுவனம் வி.ஜி.சந்தோசம் மற்றும் பள்ளி நிா்வாகத்துக்கு அரசு சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்திலேயே தொன்மையான மொழியான தமிழ்மொழி என்றும் அழியாது. இந்த மாவட்டத்தில் ஆட்சியராகப் பொறுப்பேற்று முதல் நிகழ்வாக திருவள்ளுவா் சிலையைத் திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அரசியலமைப்பு சட்டம் - முகப்புரை தூண் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடு 1947-இல் சுதந்திரம் அடைந்த பின்னா், நமக்கென அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. நாம் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றிய பின்னா், குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையையும் பெற்று தந்தது இந்த அரசியலமைப்பு சட்டம். மாணவா்கள் நல்ல முறையில் படித்து தோ்ச்சி வீதம் அதிகரித்து மாநிலத்தில் முதல் 10 இடங்கைளைப் பெற்று மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியா் ஞானசேகரன், உதவித் தலைமை ஆசிரியா்கள் பிரபாகரன், சரளா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், வணிக சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.