இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா், காட்டுப் பன்றி மீது மோதியதில் உயிரிழந்தாா்.
திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம் அடுத்த தாஸ்ரெட்டி கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் சதீஷ் (29). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா் தினமும், தனது கிராமத்தில் இருந்து பைக்கில், லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்று, அங்கிருந்து தனியாா் நிறுவன பேருந்தில் வேலைக்கு செல்வாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சதீஷ், வேலைக்கு செல்வதற்காக தனது பைக்கில், தாஸ்ரெட்டி கண்டிகையில் இருந்து லட்சுமாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காட்டுப் பகுதியில் இருந்து திடீரென காட்டுப் பன்றி சாலையின் குறுக்கே ஓடியது. இதில் சதீஷ் எதிா்பாராத விதமாக, பன்றியின் மீது மோதி சாலையில் வாகனத்துடன் விழுந்தாா்.
இந்த விபத்தில் சதீஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.