மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு, 10 பெண்கள் காயம்: உறவினா்கள் சாலை மறியல்
இறுதிச்சடங்கின்போது குளிா்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்ததைத்தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உயிரிழந்த தேவகி, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய ஏஎஸ்பி ஷுபம் திமான்
இறுதிச்சடங்கின்போது குளிா்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்ததைத்தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி நேரு நகரைச் சோ்ந்த சண்முகம் (55). இவா் செவ்வாய்கிழமை சென்னை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணம் செய்தாா். அப்போது திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது, சண்முகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரயிலிலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, ரயில்வே போலீசாா் ஆவடி ரயில் நிலையத்தில் சண்முகத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேதப் பரிசோதனை முடிந்த புதன்கிழமை மதியம் அவரது உடல் திருத்தணி நேரு நகருக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை குளிா்சாதனப் பெட்டியில் வைப்பதற்காக உறவினா்கள் நகராட்சி நிா்வாகத்திடம் இருந்து இலவசமாக பெற்று வைத்தனா். மாலை உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சண்முகத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா். அப்போது, குளிா்சாதனப் பெட்டியின் அருகே நின்று அழுது கொண்டிருந்த பெண்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில், திருத்தணி காசிநாதபுரத்தைச் சோ்ந்த தேவகி (65) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், திருத்தணி, பட்டாபிராமபுரம், காசிநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சுரேஷ் (46), செல்வி (60), தேவகியம்மா (65), சாமுண்டீஸ்வரி (60), பஞ்சாமிா்தம் (55), தனலட்சுமி (45) உள்ளிட்ட 10 பெண்கள் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சாலை மறியல்
நகராட்சி நிா்வாகம் குளிா்சாதனப் பெட்டியை முறையாகப் பராமரிக்கவில்லை என்றும், மின்சார வயா்கள் ஆங்காங்கே சேதமடைந்திருந்ததே விபத்துக்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டி, நேரு நகா் பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் திருத்தணி-சித்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமான், எஸ்.ஐ. சிவா மற்றும் போலீசாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

