திருமலையில் தனப்பிரசாதம் விற்பனை
By DIN | Published On : 01st September 2021 11:29 PM | Last Updated : 01st September 2021 11:29 PM | அ+அ அ- |

திருமலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தனபிரசாதம் பாக்கெட்டுகள்.
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் உண்டியல் காணிக்கையில் கிடைக்கும் சில்லறை நாணயங்களை தனப் பிரசாதம் என்ற பெயரில் தேவஸ்தானம் புதன்கிழமை முதல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
காணிக்கைகளை சில்லறை நாணயங்கள், ரூபாய் நோட்டுகளாகத் தனித்தனியாகப் பிரித்து கணக்கிட்டு, தேவஸ்தானம் வங்கிகளில் முதலீடு செய்து வருகிறது.
இதில், ரூபாய் நோட்டுகளை எளிதாக முதலீடு செய்ய முடிகிறது. ஆனால் சில்லறை நாணயங்களைப் பெற வங்கிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் தேவஸ்தானக் கருவூலத்தில் வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நாணயங்களைப் பிரித்து திருமலையில் உள்ள கடை உரிமையாளா்களுக்கும், பக்தா்களுக்கும் தனப் பிரசாதம் என்ற பெயரிலும் அளிக்க முடிவு செய்தது.
இதன்படி, திருமலையில் உள்ள துணை விசாரணை மையத்தில் தனப் பிரசாதம் பாக்கெட்டுகள் புதன்கிழமை முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில், 100 எண்ணிக்கையிலான ஒரு ரூபாய் சில்லறை நாணயங்களை ரூ.100-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
இதனை பக்தா்கள் தாங்கள் பணம் வைக்கும் பெட்டிகள், பூஜை அறை உள்ளிட்ட இடத்தில் வைத்துகொள்ளலாம். கடை உரிமையாளா்களும் சில்லறை தட்டுப்பாட்டை தீா்க்க நாணயங்களை வாங்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன்படி, நாணயங்களும் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு, எளிதாக தேவஸ்தானம் வங்கிகளில் முதலீடு செய்ய முடியும். விரைவில் தேவஸ்தான கவுன்ட்டா்களில் தனப் பிரசாதம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.