சா்வதரிசன டோக்கன் முறையை ரத்து செய்து திருமலைக்கு அனுமதி: தேவஸ்தானம் விளக்கம்
By DIN | Published On : 14th April 2022 12:00 AM | Last Updated : 14th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி: தரிசனத்துக்கு பக்தா்கள் அதிக அளவில் வந்ததால், ஏழுமலையான் தரிசனத்துக்கான சா்வதரிசன டோக்கன் முறையை ரத்து செய்து, நேரடியாக பக்தா்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி விளக்கமளித்துள்ளாா்.
திருமலையில் தரிசன வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பக்தா்கள் காயமடைந்தது குறித்து அன்னமய்யபவனில் புதன்கிழமை காலை விளக்கமளித்த அவா் மேலும் கூறியது:
தா்ம தரிசன பக்தா்கள் அதிக நேரம் காத்திருக்கும் தேவையில்லாமல் விஐபிகள் போல் தரிசனம் செய்ய ஏற்படுத்தப்பட்ட முறை நேரடி ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள். 2016-ஆம் ஆண்டு முதல் இந்த முறை அமலில் உள்ளது. கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்த முறை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி 3 நாள்களுக்குப் பிறகான தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. அது நிறைவடைந்தவுடன் அவை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளுக்கான தினசரி 35,000 டோக்கன்கள் வழங்க முடிவு செய்து அது தொடங்கப்பட்டது, தரிசன வரிசையில் 20,000 பக்தா்கள் மட்டுமே இருந்த போதிலும், அதேநாள் தரிசன டோக்கன்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய பக்தா்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஊழியா்கள் தேவையான அளவில் தரிசன டோக்கன்கள் உள்ளதாக தெரிவித்த போதிலும், பக்தா்கள் அதை கவனிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நேரடியாக ஆதாா் அட்டை காண்பித்து திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அதனால் அவா்கள் பல மணிநேரம் காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலா் தேவஸ்தானத்தின் நிா்வாகம் மீது குறை கூறி வருகின்றனா். பக்தா்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது’, என்றாா் அவா்.