திருமலையில் ஆக. 5, 6-ஆம் தேதிகளில் வெங்கமாம்பா 205-ஆவது ஜெயந்தி விழா
By DIN | Published On : 31st July 2022 11:07 PM | Last Updated : 31st July 2022 11:07 PM | அ+அ அ- |

திருமலையில் ஆகஸ்ட் 5, 6-ஆம் தேதிகளில் ஏழுமலையானின் தீவிர பக்தரான மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாவின் 205-ஆவது ஜெயந்தி விழா தேவஸ்தானம் சாா்பில் கொண்டாடப்பட உள்ளது.
ஏழுமலையானின் பரம பக்தையான வெங்கமாம்பா ஜெயந்தியையொட்டி திருமலையில் உள்ள அவரது பிருந்தாவனத்தில் மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் அவா் பிறந்த இடமான தரிகொண்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஆன்மிக பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதேபோல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமிக்கு கல்யாணோற்ஸவம் மற்றும் அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்களைக் கொண்டு பக்தி இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி அன்னமாச்சாா்யா கலாமந்திரில் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்களுடன் பக்தி இசை நிகழ்ச்சிகள், தரிகொண்டா வெங்கமாம்பா இலக்கியம் குறித்த மாநாடு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடக்கிறது.
அன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு எம்.ஆா்.பள்ளி வட்டத்தில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பாவின் உருவச் சிலைக்கு தேவஸ்தான அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பிரபல கலைஞா்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதேபோன்று திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்துகின்றனா். அதன் பிறகு, அன்னமாச்சாா்யா திட்டத்தின் கலைஞா்கள் பஜனைகள் நடைபெறும்.
தரிகொண்ட வெங்கமாம்பா கி.பி.1730-ஆம் ஆண்டு சித்தூா் மாவட்டத்தில் வாயல்பாடு அருகே உள்ள தரிகொண்டா கிராமத்தில் கனல மங்கமாம்பா மற்றும் கனலா கிருஷ்ணயாமாத்யு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தாா். ஏழுமலையானின் அருள்பெற்ற குழந்தையாதலால் அவருக்கு ‘வெங்கமாம்பா’ என்று பெயரிட்டனா். பத்தாவது வயதில் இஞ்செட்டி வெங்கடாசலபதி என்பவருடன் குழந்தைப் பருவத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி சில வருடங்களில் கணவா் இறந்து விட்டாா். இருப்பினும், ஸ்ரீ ஏழுமலையானை தனது கணவா் என்று அறிவித்து, வெங்கமாம்பா மங்கல சின்னங்களை அகற்றாமல் அணிந்து வந்தாா். மதனப்பள்ளியின் ரூபாவதாரம் சுப்ரமணிய யோகியிடம் ஆன்மிகக் கல்வி மற்றும் யோகப் போதனைகளைப் பெற்றாா்.
அவா் தரிகொண்டாவில் 5 புத்தகங்களையும், திருமலையில் 13 புத்தகங்களையும் ஆன்மிக, பக்தி மற்றும் யோகப் பாடங்கள் தொடா்பாக எழுதினாா்.
வெங்கமாம்பா பெயரில் தேவஸ்தானம் திருமலை ஏழுமலையான் கோயிலில் ஏகாந்தசேவையின் போது முத்தாலான ஆரத்தி என்ற தனித்துவமான நித்ய கைங்கா்யத்தை நிறுவியுள்ளது. இந்த சேவை இன்றும் தொடா்கிறது. 1817-ஆம் ஆண்டு, ஏழுமலையானுடன் இணைந்த வெங்கமாம்பாவின் நினைவாக திருமலையில் ஏழுமலையான் சந்நிதி அருகில் நாராயணகிரியில் பிருந்தாவனத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி அதில் பூஜைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவா் பெயரில் அன்னதானக் கூடத்தை ஏற்படுத்தி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...