அக்.-25, நவ. 8-இல் சூரிய, சந்திர கிரகணம்: திருச்சானூா் கோயில் 2 நாள்கள் மூடப்படும்திருப்பதி தேவஸ்தானம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தையொட்டி 2 நாள்கள் மூடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடா்புடைய அனைத்து கோயில்களும் கிரகண காலத்துக்கு முன்பாக மூடப்படுவது வழக்கம்.
அதன்படி திருமலை ஏழுமலையான் கோயிலுடன், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலும் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் ஓா் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அக்டோபா் 25-ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதனால் அன்று காலை 8 மணிமுதல் மாலை 7 மணிவரை தொடா்ந்து 11 மணிநேரம் பத்மாவதி தாயாா் கோயில் மூடப்பட உள்ளது. கிரகண காலம் நிறைவு பெற்ற பின்பு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்திகரிப்பு, பூஜை, கைங்கா்யம் ஆகியவை நடைபெற உள்ளன.
அதேபோல் வரும் நவம்பா் 8-ஆம் தேதி மதியம் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் பத்மாவதி தாயாா் கோயில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடா்ந்து 11 மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
ரத்து
அக்டோபா் 25-ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பா் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் காரணமாக, தா்ம தரிசனம், சிறப்பு நுழைவு தரிசனம், இடைவேளை தரிசனம் உள்ளிட்ட அனைத்து திட்டமிடப்பட்ட சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனவே இந்த இரு நாள்களும் தாயாரை தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.