தரிசனத்துக்கு 24 மணி நேரம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறை காரணமாக அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை 13 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேரம் காத்திருப்புக்கு பின்னா், தரிசனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டன. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

81,305 பக்தா்கள் தரிசனம்...: இதனிடையே, சனிக்கிழமை நாள் முழுவதும் 81,305 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 34,342 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15,000 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.

நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் அலிபிரி நடைபாதையில் 10,000, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 5,000 என வழங்கப்படுகின்றன.

உண்டியல் காணிக்கை ரூ3.71 கோடி...: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.71 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் கணக்கிட்டு, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாய் தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.3.71 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com