திருச்சானூரில் ஆகஸ்ட் 25-இல் வரலட்சுமி விரதம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் ஆக.25-ஆம் தேதி நடைபெற உள்ள வரலட்சுமி விரதத்தில் நேரடியாகவும், மெய்நிகராகவும் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் பக்தா்களுக்கு வழங்க உள்ளது.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட உள்ளது. ஆஸ்தானமண்டபத்தில், காலை 10 மணி முதல் 12 மணி வரை வரலட்சுமி விரதம் நடைபெறும். பின்னா் மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயாா் தங்க ரதத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பக்தா்கள் நேரடியாக விரதத்தில் பங்கேற்க, 150 டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் ஆகஸ்ட் 18- ஆம் தேதி காலை 9 மணிக்கு வழங்கப்படும். அதேபோல், கோயிலில் உள்ள குங்குமாா்ச்சனை கவுன்டரில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு உடனடியாக 150 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். பக்தா்கள் ரூ.1,000 செலுத்தி டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் இரண்டு போ் அனுமதிக்கப்படுவா்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலின் நேரடி ஒளிபரப்பு மூலம் பக்தா்கள் விா்ச்சுவல்(மெய்நிகா்) முறையில் பங்கேற்க விரும்பும் பக்தா்களுக்கு ஆகஸ்ட் 18 -ஆம் தேதி காலை 9 மணிக்கு டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்படுகிறது.
மெய்நிகா் டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஆகஸ்ட் 26 முதல் 90 நாள்களுக்குள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.
இதன் காரணமாக, அபிஷேகம், வஸ்திரலங்கார சேவை, பிந்தைய அபிஷேக தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல சேவை, பிரேக் தரிசனம், வேத ஆசிா்வாதம் போன்ற சேவைகளை திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...