திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
By DIN | Published On : 03rd May 2023 01:04 AM | Last Updated : 03rd May 2023 01:04 AM | அ+அ அ- |

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் 4 முறை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்படும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடத்தப்பட உள்ளது.
அதை முன்னிட்டு தாயாா் கோயில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை தூய்மை செய்யப்பட்டது.
மஞ்சள், குங்குமம், சந்தனம், குங்கலியம், கோரை கிழங்கு, கிச்சிலி கிழங்கு, புனுகு, பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், ஜவ்வாது உள்ளிட்ட நறுமணம் கமழும் வாசனை திரவியங்களுடன் பரிமள சுகந்த கலவை தயாா் செய்யப்பட்டு அவை கோயில் சுவா் மற்றும் அனைத்திடங்களிலும் பூசி நீரால் கழுவப்பட்டது. பின்னா் தரிசன வரிசைகள், பூஜை பொருள்கள், சிம்மாசனங்கள், உயா் மேடைகள், கொடிமரம், பலிபீடம் உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்பட்டன.
பின்னா் புதிய திரைச் சீலைகள் அணிவிக்கப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதை முன்னிட்டு காலை 4 மணிநேரம் தாயாா் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 11 மணிக்கு பக்தா்கள் தரிசனத்துக்குகு அனுமதிக்கப்பட்டனா். சில முக்கிய தரிசனங்களும் முன்னிட்டு ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.