திருப்பதியில் மகாசம்ப்ரோக்ஷண நிகழ்வுகள் தொடக்கம்
By DIN | Published On : 22nd May 2023 12:40 AM | Last Updated : 22nd May 2023 12:40 AM | அ+அ அ- |

கோவிந்தராஜசுவாமி கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணத்தை யொட்டி நடத்தப்பட்ட யாகம்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணத்திற்கான வைதீக காரியங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் உள்ள கருவறை கோபுரத்தில் தங்க தகடுகள் பொருத்தம் பணி கடந்த 8 மாதகாலமாக நடைபெற்று வருகிறது. அப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதால், புதிய தங்க கோபுரத்துக்கு மகாசம்ப்ரோக்ஷணம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதற்கான வைதீக காரியங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
கோயிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 19 ஹோமகுண்டங்களில் 37 ருத்விக்கள் ஹோமம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை யாகசாலையில் ஹோமகுண்ட தீபம் ஏற்றப்பட்டு சமயச் சடங்குகள், விஷ்வக்சேனாராதனம், பஞ்சகவ்யாராதனம், வாஸ்துஹோமம், ரக்ஷாபந்தனம், கலசஸ்தாபனம், வேத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை, கருவறையில் உள்ள தெய்வங்களின் சக்தி கும்பத்தில் (கலசம்) ஆவாஹனம் செய்யப்படுகிறது. இந்த கும்பங்களுடன் உற்சவமூா்த்திகளும் யாகசாலையில் வைத்து சடங்குகள் நடத்தப்பட உள்னது. வரும் மே 25-ஆம் தேதி வரை இந்த வைதீக காரியங்கள் முறையாக ஆகம விதிப்படி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.