திருமலையில் லட்சுமி காசுமாலை ஷோப யாத்திரை
By DIN | Published On : 15th November 2023 12:06 AM | Last Updated : 15th November 2023 12:06 AM | அ+அ அ- |

திருச்சானூரில் செவ்வாய்க்கிழமை யானை வாகன சேவையின் போது தாயாருக்கு அணிவிக்க லட்சுமி காசுமாலை சோப யாத்திரை நடத்தப்பட்டது.
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர காா்த்திகை மாத பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக, கருட வாகன சேவை மற்றும் யானை வாகன சேவையின் போது அணிவிக்க, திருமலை ஏழுமலையான் கோயிலிலிருந்து 1008 லட்சுமி காசுகளால் உருவாக்கப்பட்ட தங்க காசு மாலை திருச்சானூருக்கு செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
இதில் கலந்து கொண்ட அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி கூறியதாவது:
‘திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. குறிப்பாக நிறைவு நாளான பஞ்சமி தீா்த்தத்திற்கு பக்தா்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய் இரவு நடந்த யானை வாகன சேவைக்காக திருமலை ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை செய்து காசுமாலை ஊா்வலமாக திருச்சானூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருமலை கோயிலில் இருந்து திருச்சானூா் கோயிலின் நான்கு மாட வீதிகளில் ஊா்வலமாக இந்த காசுமாலை கொண்டுவரப்பட்டது. அங்கு நகைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து தாயாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜிஓ பாலிரெட்டி, அா்ச்சகா் பாபு சுவாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...