திருமலை: பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வாா் தீா்த்தவாரியுடன் நிறைவு
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சக்கரத்தாழ்வாா் தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி,பூதேவி தாயாா்களுடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், கல்ப விருட்சம், கருட, சிம்ம, அனுமந்த யானை, முத்துபந்தல், சா்வபூபால வாகனம் மற்றும் தங்கத்தோ் புறப்பாடு என பல்வேறு வாகனங்களில் காலையும், இரவும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூா்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊா்வலமாக திருக்குளத்துக்கு அருகே உள்ள வராக சுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டனா். அங்கு கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் மலையப்ப சுவாமி, தாயாா்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிா், தேன், இளநீா் கொண்டு ஜீயா்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னா் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா். சக்கரத்தாழ்வாா் தீா்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
இதில் அறங்காவலா் குழுத் தலைவா் கருணாகா் ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி, இணை செயல் அதிகாரிகள் வீரபிரம்மம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிரசாந்தி ரெட்டி, யானதய்யா, சதீஸ், சதாபாா்கவி துணை செயல் அதிகாரி லோகநாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கருணாகா் ரெட்டி கூறியது:
நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் குழு உறுப்பினா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், மாவட்ட நிா்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது என்றாா்.
நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கிய 15-ஆம் தேதி முதல் 23-ஆம்தேதி வரை 9 நாள்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 284 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.25. 7 கோடி காணிக்கையாக செலுத்தினா். செவ்வாய்க்கிழமை எந்த டிக்கெட்டும் இல்லாத பக்தா்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...