ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட அமெரிக்க டாலா்கள் திருட்டு: ரூ.150 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக ஊழியா் மீது புகாா்

ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட அமெரிக்க டாலா்கள் திருட்டு: ரூ.150 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக ஊழியா் மீது புகாா்

தேவஸ்தான ஊழியா் தமிழகம், ஆந்திரத்தில் சுமாா் ரூ. 150 கோடியில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Published on

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலா்களை ஆசன வாயில் மறைத்து திருடிய தேவஸ்தான ஊழியா் தமிழகம், ஆந்திரத்தில் சுமாா் ரூ. 150 கோடியில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தேவஸ்தான வட்டாரங்கள் கூறியதாவத:

திருமலை ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயா் மடத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் தேவஸ்தான ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 20 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

காணிக்கை எண்ணும்போது, பல ஆண்டுகளாக வெளிநாட்டு டாலா்களை ரவிக்குமாா் திருடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனா்.

ஆசன வாயில் டாலா்கள் மறைப்பு:

அதில் ரவிக்குமாா் காணிக்கை திருடுவதைப் பாா்த்த விஜிலென்ஸ் அதிகாரிகள், வெளியில் வந்த ரவிக்குமாரை பிடித்து தீவிர சோதனைக்கு உள்படுத்தினா். அதில், அவா் தன்னுடைய ஆசன வாயில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலா்களை திருடி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவா் மீது விஜிலென்ஸ் துறையினா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் ரவிக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பல ஆண்டுகளாக அவா் இதேபோல் நாள்தோறும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் அமெரிக்க டாலா்களை திருடி ஆசன வாயில் மறைத்து கொண்டு சென்றதும், அந்த பணத்தில் ஆந்திரம், தமிழகத்தில் ரூ. 150 கோடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளது தெரிந்தது.

ரகசியம் காத்த தேவஸ்தான அதிகாரிகள்:

இதுபற்றி அறிந்த தேவஸ்தான நிா்வாகம், உண்டியல் காணிக்கை விவகாரம் வெளியில் தெரிந்தால் அவப்பெயா் ஏற்பட்டு கோயில் மீது பக்தா்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி இந்த வழக்கை லோக் அதாலத்துக்கு கொண்டு சென்றனா்.

அதைத் தொடா்ந்து, சமரசம் பேசி ரவிக்குமாா் திருடி வாங்கிக் குவித்த சொத்துகளில் ஒரு பகுதியை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனா்.

இந்த முடிவுக்கு அப்போதைய முதல்வா் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த தேவஸ்தான அறங்காவலா் குழுவும் ஒப்புதல் அளித்தது. ஆனால் இது குறித்து அறங்காவலா் குழுவினா் ரகசியம் காத்தனா்.

மேலும், ரவிக்குமாரின் சொத்துகளில் ஒரு பகுதியை நன்கொடையாக எழுதி வாங்கிய நிலையில், மேலும் பல கோடி சொத்துகளை போலீஸ் அதிகாரிகள் மற்றும் கடந்த ஆட்சியில் இருந்த செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஆகியோா் தங்களுடைய உறவினா்களின் பெயா்களில் எழுதி வாங்கிக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மீண்டும் விசாரணைக்கு கோரிக்கை:

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தி வருகின்றனா். தேவஸ்தான ஊழியா் ஒருவரே, காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலா்களை திருடி ரூ. 150 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்த சம்பவம் பக்தா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

*சென்னையில் ஆசன வாய் அறுவை சிகிச்சை*

திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து வெளிநாட்டு டாலா்களை பதுக்கி எடுத்து வருவதற்காக, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவா்கள் கொடுத்த ஆலோசனையின்படி, ரவிக்குமாா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிதுபடுத்தி கொண்டாா் என்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விவகாரம் வெளியே வந்தது எப்படி?*

கடந்த 2 ஆண்டுகளாக இந்த சம்பவம் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில், ஆந்திர மாநில சட்டமேலவை உறுப்பினா் ஒருவா் இந்து அறநிலையத் துறை அமைச்சா் விவேகானந்த ரெட்டியிடம் கடந்த வாரம் புகாா் அளித்தாா். அதன்பேரில், அமைச்சா் விவேகானந்த ரெட்டி சட்டமேலவையில் இந்த முறைகேடு, மோசடி குறித்துப் பேசினாா்.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற இந்த மோசடி தொடா்பாக முந்தைய அறங்காவலா் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சா் கூறினாா்.

இதையடுத்துதான் இந்த விவகாரம் வெளியே கசிந்து அனைவருக்கும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com