திருமலையில் அயோத்தியாகாண்ட அகண்ட பாராயணம்
திருமலையில் நாதநீராஜனம் மண்டபத்தில் புதன்கிழமை அயோத்தியாகாண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.
திருமலையில் கரோனா பாதிப்பு முதல் பல்வேறு பாராயணங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது ராமாயணம் பாராயணத்தின் ஒரு பகுதியாக அயோத்தியாகாண்ட பாராயணம் நடந்து வருகிறது. பாராயண ஸ்லோகங்கள் 150 முதல் 180 ஐ எட்டியவுடன் அதை அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.
அதன்படி, அயோத்தியா காண்டத்தின் 12-ஆவது தவணை அகண்ட பாராயணம் புதன்கிழமை பக்தா்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் நிகழ்ச்சியை காலை 7 மணி முதல் 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்பியது.
அயோத்தியாகாண்டத்தின் 45 முதல் 49 வது சா்க்கங்கள் வரையுள்ள 141 ஸ்லோகங்கள், யோகவாசிஷ்டம் மற்றும் தன்வந்திரி மகாமந்திரத்திலிருந்து 25 ஸ்லோகங்கள் உட்பட மொத்தம் 166 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
தா்மகிரி வேத பாடசாலை அறிஞா்கள் ராமானுஜாச்சாரியா், அனந்த கோபாலகிருஷ்ணா, மாருதி உள்ளிட்டோா் ஸ்லோகம் வாசித்தனா். அகண்ட பாராயணத்தில் தா்மகிரி வேத பள்ளி ஆசிரியா்கள், எஸ்.வி.வேத பல்கலை, எஸ்.வி., உயா்கல்வி பல்கலை வேத ஓதுபவா்கள், தேசிய சமஸ்கிருத பல்கலை அறிவியல் அறிஞா்கள் பங்கேற்றனா்.
இந்நிகழ்வில் அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்களான தேஜோவதி குழுவினா் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராமா் கீா்த்தனையும், இறுதியில் ராமா் பாடல்களையும் பாடினா். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், அறிஞா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
