ஏழுமலையான் தரிசனம் பெயரில் மோசடி செய்த இருவா் கைது
திருமலையில் பக்தா்களை தரிசனம் என்ற பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றிய இருவரை கைது செய்துள்ளனா்.
திருப்பதி மாவட்ட எஸ்பி சுப்ப ராயுடு உத்தரவின் படி, திருமலையில், மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் போலி எம்.எல்.ஏ/எம்.எல்.சி பரிந்துரை கடிதங்களை தயாரித்து அப்பாவி பக்தா்களிடமிருந்து பணம் பறித்து ஏமாற்றி வரும் கும்பலை வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், நாயுடுபேட்டாவைச் சோ்ந்த பிரவீன் குமாா் மற்றும் செஞ்சு பாலாஜி என்ற இருவா் சில காலமாக எம்.எல்.ஏ/எம்.எல்.சி.க்களின் பெயரில் போலி லெட்டா் பேடுகளை தயாரித்து வருவதாகவும், பிரேக் தரிசனம் ஏற்பாடு செய்வதாகக் கூறி பக்தா்களிடமிருந்து ரூ. 10,000/- முதல் ரூ. 20,000/- வரை வசூலித்து வருவதாகவும் கண்டறியப்பட்டது.
சூலூா்பேட்டை எம்எல்ஏ என். விஜயஸ்ரீ, கூடூா் எம்எல்ஏ சுனில் குமாா், எம்.எல்.சி கல்யாண் சக்ரவா்த்தி ஆகியோரின் பெயா்களில் போலி கடிதங்களை தயாரித்து ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்களை ஏமாற்றியபோது போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.
மேலும், போலி ஆவணங்களில் பயன்படுத்தப்பட்ட தரவு, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ரூ.1,000 ரொக்கம் போன்ற ஆதாரங்களை அவா்களிடமிருந்து போலீசாா் பறிமுதல் செய்தனா். கூடூா் முதலாம் நகர காவல் நிலையம், மற்றும் திருமலை இரண்டாம் நகர காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா் வேறு சில மோசடிகளையும் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இருவரின் மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை போலீஸாா் ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளனா்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த திருமலை போலீஸாா், ஏழுமலையான் தரிசனத்துக்காக மக்கள் எந்த இடைத்தரகா்களையும் நம்பக்கூடாது என்றும், தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ வலைத்தளம் அல்லது கவுண்டா்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெளிவாக எச்சரித்தனா்.
தரிசனம் என்ற பெயரில் யாராவது பணம் கேட்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பக்தா்களிடம் வேண்டுகோள் விடுத்தனா். போலி பரிந்துரை கடிதங்கள் மூலம் மோசடி செய்வதைத் தடுக்க, எஸ்பியின் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் போலீசாரின் கண்காணிப்பு தொடரும்’’, என்று அவா்கள் தெரிவித்தனா்.
திருமலை காவல்துறையுடன் சோ்ந்து, தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முக்கிய உதவியாக இருந்தனா்.
இதுபோன்ற மோசடிக்கு ஆளானவா்கள் உடனடியாக காவல் துறையைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.
தொடா்பு எண்கள்:
எஸ்எச்ஓ ஒன் டவுன் பிஎஸ் திருமலை: 94407 96769
எஸ்எச்ஓ டூ டவுன் பிஎஸ் திருமலை: 94407 96772.
