பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயிலின் 182 மணிநேர தரிசன நேரத்தில், 164 மணிநேரம் பொது பக்தா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரின் கேள்விகளுக்கும் செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் பதிலளித்தாா். அதன் பின்னா் அவா் வைகுண்ட வாயில் தரிசனத்திற்காக தேவஸ்தானம் செய்த ஏற்பாடுகள் குறித்து விளக்கினாா்.
கடந்த நவம்பா் 17 முதல் 25 வரை திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடைபெற்றது. வரும் டிசம்பா் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாள்களுக்கு வைகுண்ட துவார தரிசனங்கள் நடைபெறும்.
பத்து நாள்கள் வைகுண்ட துவார தரிசனங்களுக்கு கிடைக்கும் 182 மணிநேர தரிசனத்தில், 164 மணிநேரம் பொது பக்தா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 7.70 லட்சம் பக்தா்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிசம்பா் 30, 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் மின்னணு டிப் மூலம் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. நவம்பா் 27 முதல் டிசம்பா் 1 வரை மின்னணு டிப் மூலம் கிட்டத்தட்ட 25 லட்சம் பக்தா்கள் பதிவு செய்தனா்.
டிசம்பா் 2 அன்று மின்னணு டிப் மூலம் 1.70 லட்சம் பக்தா்களுக்கு சா்வ தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல் மூன்று நாள்களுக்கு எஸ்.இ.டி., ஸ்ரீவாணி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜனவரி 2 முதல் 8 வரை வைகுண்ட வாயில் - 2 மூலம் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவா். இந்த 10 நாள்களில் திருப்பதியில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது. சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும். - நேரில் வரும் நெறிமுறை பிரமுகா்களுக்கு மட்டுமே தரிசனம் ஒதுக்கப்படும்.
ஜனவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உள்ளூா் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு டிச. 10 ஆம் தேதி அளிக்கப்படும். இதில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி, சிவிஎஸ்ஓ முரளி கிருஷ்ணா, சிஇ சத்யநாராயணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

