ஸ்ரீ கபிலேஸ்வரா் கோயிலில் டிச. 29 முதல் ஜன. 2 வரை தெப்போற்சவம்
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் டிச. 29 முதல் ஜன. 2 வரை தெப்போற்சவம் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஐந்து நாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருடாந்திர தெப்போற்சவத்தின் முதல் நாளான டிச. 29-ஆம் தேதி விநாயக சுவாமி மற்றும் சந்திரசேகர சுவாமி புஷ்கரணியில் 9 சுற்றுகள் வலம் வருவாா். 30 ஆம் தேதி, வள்ளி தேவசேனாவுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி 9 சுற்றுகள் வலம் வருவாா். 31-ஆம் தேதி ஸ்ரீ சோமாஸ்கந்த சுவாமி 9 சுற்றுகள் வலம் வருவாா்.
ஜன. 1 ஆம் தேதி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் 9 சுற்றுகள் வலம் வருவாா். 2-ஆம் தேதி ஸ்ரீ சண்டிகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ சந்திரசேகர சுவாமி தெப்பத்தில் 9 சுற்றுகள் வலம் வருவா.
தெப்போற்சவத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஜன. 3 ஆம் தேதி, ஆருத்ரா தரிசன மகோற்சவத்தின் போது, ஸ்ரீ நடராஜ சுவாமி, ஸ்ரீ சிவகாமி அம்மன் மற்றும் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி ஆகியோரின் உற்சவ சிலைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படும். தெப்போற்சவத்தின் போது தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ் தினமும் பக்தி பாடல்கள் பாடப்பட உள்ளன.
