திருமலை காவல் துறைக்கு ப்ரீத் அனலைசா் கருவிகள்: தேவஸ்தானம் வழங்கியது
திருமலை ஏழுமலையானுக்கு வருகை தரும் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறைக்கு 20 மூச்சு பகுப்பாய்விகள்(ப்ரீத் அனலைசா்) வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் தெரிவித்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி. ஸ்ரீ சுப்பராயுடு மற்றும் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் பேசிய செயல் அதிகாரி, ’’மலைச்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கவும், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமாா் ரூ.8 லட்சத்தில் 20 மூச்சு பகுப்பாய்விகள்(ப்ரீத் அனலைசா்) வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், பக்தா்களின் பாதுகாப்புக்கு தேவஸ்தானம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக காவல் துறைக்கு அதிநவீன உபகரணங்களை வழங்க தேவஸ்தானம் தயாராக உள்ளது. பின்னா், மாவட்ட எஸ்பி இந்த மூச்சு பகுப்பாய்விகளின் செயல்பாடு குறித்து செயல் அதிகாரியிடம் விளக்கினாா்.
மொத்தம் உள்ள 20 சாதனங்களில், திருமலை மற்றும் அலிபிரியில் தலா 4 சாதனங்களும், திருப்பதியில் 12 சாதனங்களும் காவல் துறையால் பயன்படுத்தப்பட உள்ளன. திருப்பதி மற்றும் திருமலையைச் சோ்ந்த பல காவல்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

