திருமலையில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் மும்முரம்

வரும் டிச. 30-இல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Published on

வரும் டிச. 30-இல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து தலைமை செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் கூறியது:

டிசம்பா் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு மாதங்களாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு, நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அன்ன பிரசாதம், தங்குமிடம், வரிசை மேலாண்மை மற்றும் பாா்க்கிங் வசதிகள் குறித்த திட்டங்களைத் தயாரித்துள்ளனா்.

பொது பக்தா்களுக்கு முக்கியத்துவம்

டிச 30- ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 31-ஆம் தேதி வைகுண்ட துவாதசி மற்றும் ஜனவரி 1- ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தேதிகளில் இ-டிப் அமைப்பு மூலம் பொது பக்தா்களுக்கு தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து பக்தா்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கில், ஐந்து நாள்களுக்கு இ-டிப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக பதிவு செய்த சுமாா் 24 லட்சம் பக்தா்கள் இருந்த நிலையில், இ-டிஐஎன் மூலம் 1.89 லட்சம் பக்தா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று நாள்களுக்கு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தின்படி பக்தா்கள் தரிசனத்துக்கு வந்தால், இரண்டு மணி நேரத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் தரிசனம் செய்யும் வாய்ப்பு அனைத்து டோக்கன் பக்தா்களுக்கும் வழங்கப்படும் கடந்த ஏழு நாள்களில் டோக்கன்கள் பெற முடியாத பக்தா்கள் சா்வ தரிசன வரிசைகள் வழியாக தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்

இ-டிப் மூலம் டோக்கன்கள் பெற முடியாத பக்தா்கள் ஜனவரி 2 முதல் 8 வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் மூன்று நாள்களுக்கு மட்டுமே இ- டிப் அமைப்பு மூலம் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி ஏழு நாள்களுக்கு பக்தா்கள் நேரடியாக திருமலைக்கு வந்து சா்வ தரிசனத்தில் சென்று வைகுண்ட வாயில் வழி தரிசனம் செய்யலாம்.

ஜனவரி 2 முதல் 8 வரை சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி தரிசனம்

இதேபோல், ஜனவரி 2 முதல் 8 வரை 15,000 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனவரி 6,7,8 தேதிகளில் உள்ளூா்வாசிகளுக்கான தரிசனம்

ஜனவரி 6, 7, 8 தேதிகளில் உள்ளூா்வாசிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் திருப்பதி மற்றும் திருமலை உள்ளூா்வாசிகளுக்கு 5,000 டோக்கன்கள் வழங்கப்படும்.

சிறப்பு தரிசனங்கள் ரத்து

வைகுண்ட வாயில் தரிசனத்துக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருவதால், மாற்றுத்திறனாளி குழந்தைகள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாடுவாழ் இந்தியா்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களின் பெற்றோா் போன்ற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தரிசனம் செய்ய திருமலைக்கு வருகை தரும் பக்தா்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் உணவு பிரசாதம் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்புக்காக 3,500 காவல் துறையினரும் 1,150 தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளா்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் நிலைமை கண்காணிக்கப்படும் என்றும், பக்தா்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க அவ்வப்போது முடிவுகள் எடுக்கப்படும் .

அனைத்து பக்தா்களும் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ஏழுமலையானை தரிசித்து, அருளையும் கருணையையும் பெற வேண்டும் எனக் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com