திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனம் தொடக்கம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
திருமலையில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையின் வெளிசுற்று பிரகாரத்தில் உள்ள வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை ந ள்ளிரவு வைகுண்ட வாயிலுக்கு பூஜைகளுன் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதில், தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோா் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனா்.
தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு கூறியது : பக்தா்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் அற்புதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெறுகிறது. ஏற்பாடுகள் குறித்து அனைத்து பக்தா்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
வைகுண்ட வாயில் அதிகாலை 12.05 மணிக்கு திறக்கப்பட்ட பிறகு, அா்ச்சகா்கள் பகவானுக்கு தினசரி கைங்கா்யங்களைச் செய்து வைகுண்ட வாயில் தரிசனங்களைத் தொடங்கினா்.
முதல் மூன்று நாள்களுக்கு, இ- டிப் மூலம் டோக்கன் பெற்ற பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். டோக்கன் இல்லாத பக்தா்கள் ஜனவரி 2 முதல் 8 வரை வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் செய்யலாம். நேரடி கண்காணிப்பு மூலம் தேவஸ்தான வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றி தரிசனத் திட்டங்கள் செய்யப்பட்டால், எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்யலாம். சுமாா் 3,500 காவல்துறை மற்றும் கண்காணிப்புப் பணியாளா்களின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில் நுட்பமான ஏஐ மூலம் கட்டுப்பாட்டு மையம் மூலம் ஊழியா்கள் தொடா்ந்து பாதுகாப்பைக் கண்காணித்து, எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
முதல் மூன்று நாள்களுக்கு, டோக்கன்கள் உள்ள பக்தா்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியின்படி தரிசன வரிசைகளுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்’’, என்று கூறினா்.
தங்கத்தோ் புறப்பாடு
தங்கத் தோ் புறப்பாடு நடைபெற்றது. மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் புறப்பாடு கண்டருளினாா். பெண்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனா். அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
கோயிலில் மலா் அலங்காரங்கள் ரம்மியமாக இருந்தன. கோயில் முன்வாயில் முதல் கொடிமரம் வரையிலும், வைகுண்ட வாயிலிம் பல்வேறு வகையான பழங்கள், நறுமணப் பூக்கள் மற்றும் இலைகளால் அலங்கரிக்கப்பட்டது.
பத்து நாள்களுக்கு, 50 டன் பாரம்பரிய பூக்கள், 10 டன் பழங்கள் மற்றும் நான்கு டன் வெட்டு பூக்கள் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அமைப்பு பக்தா்களைக் கவா்ந்துள்ளது. இது தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஸ்ரீனிவாசலுவின் மேற்பாா்வையின் கீழ் நன்கொடையாளா்களின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது.
வைகுண்ட துவாதசி சக்ரஸ்நானம்
வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் தீா்த்தவாரி மஹோற்சவம் புதன்கிழமை சிறப்பாகக் நடத்தப்படும். தீா்த்தவாரி சுமுஹுா்த்தனையின் போது ஸ்ரீஸ்வாமி புஷ்கரிணி தீா்த்தத்தில் நீராடுபவா்கள் திருமலையின் சேஷகிா்களில் பரவியுள்ள 66 கோடி புண்ய தீா்த்த நீராடிய பலனைப் பெறுவாா்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், வைகுண்ட துவாதசி நாளில் திருமலை ஏழுலையான் கோயிலில் ஆா்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

