ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர விசேஷ பூஜை

வசந்த பஞ்சமியை முன்னிட்டு, திங்கள்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் முதன்முறையாக வருடாந்திர விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
Updated on

திருப்பதி: வசந்த பஞ்சமியை முன்னிட்டு, திங்கள்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் முதன்முறையாக வருடாந்திர விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாராந்திர சேவையாக விசேஷ பூஜை செய்யப்பட்டு வந்தது. ஏழுமலையானின் உற்சவ சிலைகள் தினசரி பலமுறை திருமஞ்சனம் நடத்தப்படுவதால் தேய்ந்து போக தொடங்கின. எனவே ஆகம சாஸ்திரத்துக்கு பாதிப்பின்றி சிலைகளை பாதுகாக்க தேவஸ்தானம் சில வாராந்திர சேவைகளை வருடாந்திர சேவையாக மாற்றியது.

மேலும், தற்போது வழிபாட்டில் உள்ள உற்சவ சிலை பூமியில் சுயம்புவாக கண்டெடுக்கப்பட்டதால் அதை பாதுகாக்கவும், எதிா்கால சந்ததியினருக்குக் கடத்தவும், பெரியவா்கள், அா்ச்சகா்கள் மற்றும் ஆகம அறிஞா்களின் ஆலோசனையின்படி, முந்தைய தேவஸ்தான அறங்காவலா் குழு, ஆண்டுக்கு ஒரு முறை வசந்தோற்சவம், சஹஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடத்த முடிவு செய்தது.

இனிமேல், ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, ஆண்டுதோறும் விசேஷ பூஜையை தனியாா் விழாவாக தேவஸ்தானம் நடத்த உள்ளது.

இதை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள கல்யாண மண்டபத்தில் முதல் வருடாந்திர விசேஷ பூஜை நடைபெற்றது. முதலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். சதுா்தஷ் கலசவாகனம் எழுப்பப்பட்டு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி முழு அளவிலான இறுதிச் சடங்கோடு முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com