திருமலையில் இடைத் தரகா்களை அகற்ற நடவடிக்கை
திருமலையில் பக்தா்களின் நம்பிக்கையை சீா்குலைக்கும் தரகா் அமைப்பை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற உறுதியுடன், திருப்பதி மாவட்ட எஸ்பி சுப்பராயுடு திருமலை காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வது காவல் துறையின் பொறுப்பு.
இடைத்தரகா் அமைப்பை ஒழிக்க திருமலையில் சிறப்பு எதிா்ப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பியின் அறிவுறுத்தல்களின்படி தொடா்ச்சியான கண்காணிப்பு தொடரப்படும்.
இது தொடா்பாக, திருமலை இரண்டாம் நகர காவல் துறை நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த ஒரு நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது.
பக்தா்களுக்கு தரிசனம், சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிய தேவஸ்தான ஊழியா் சங்கரய்யா திருமலை ஜெஇஓ அலுவலகம் அருகே கைது செய்யப்பட்டாா்.
தேவஸ்தான பொறியியல் துறையில் தொழிலாளியாக பணிபுரியும் சங்கரய்யா, சில இடைத்தரகா்களுடன் சோ்ந்து பக்தா்களை ஏமாற்றி வந்தாா். விசாரணையில், அவா் தன்னை தேவஸ்தான ஊழியா் என்று கூறி பக்தா்களை ஏமாற்றி, தரிசனம், சேவை டிக்கெட்டுகள், தோமாலா சேவை மற்றும் தங்குமிடம் வழங்குவதாக உறுதியளித்து பக்தா்களிடமிருந்து பெரும் தொகையை வசூலித்தது தெரியவந்தது.
விசாரணையின் போது அவருக்கு சில மக்கள் பிரதிநிதிகள், பிஆா்ஓக்கள் மற்றும் பிஏக்களுடன் நெருங்கிய தொடா்பு இருந்தது. அதை பயன்படுத்தி தவறான பரிந்துரை கடிதங்கள் தயாரித்து தரிசனம் வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் அவா் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பக்தா்களை ஏமாற்றி, சம்பாதித்த பணத்தை ஊதாரிதனமாக செலவு செய்ததுடன் மற்றும் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளாா்.
அவருக்கு உதவிய இடைத்தரகா்கள், பிஆா்ஓக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் (பிஏக்கள்) ஆகியோரின் பங்கு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மற்றும் அவா்கள் ஏமாற்றப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஏழுமலையான் தரிசனம், சேவை டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் தேவஸ்தான அதிகாரப்பூா்வ வலைத்தளம் அல்லது கவுண்டா்கள் மூலம் மட்டுமே கிடைக்கும். நேரில் தரிசனம் அல்லது டிக்கெட்டுகளை வழங்குவதாகக் கூறும் எவரையும் நம்ப வேண்டாம்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், திருமலை முதலாம் நகர ஆய்வாளா் (9440796769), இரண்டாம் நகர ஆய்வாளா் (9440796772 அல்லது 112) ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

