நாக சதுா்த்தி: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்
திருமலையில் நாக சதுா்த்தி உற்சவத்தை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.
திருமலையில் ஆண்டுதோறும் நாக சதுா்த்தி அன்று பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் தேவியருடன் மாட வீதியில் புறப்பாடு கண்டருளுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை நாக சதுா்த்தியை முன்னிட்டு, இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி தனது இரு நாச்சியாா்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதியில் எழுந்தருளினாா். பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் மகாவிஷ்ணுவை வசிப்பிடமாகவும், குடையாகவும், ஆடையாகவும் சிம்மாசனமாகவும் இருந்து சேவை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சேஷசாயி, சேஷாஸ்துத்யம், சேஷாத்ரி நிலையம் ஆகிய சகஸ்ரநாமங்களால் ஏழுமலையான் வழிபடப்படுகிறாா். ராம அவதாரத்தில் லக்ஷ்மணனாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமனாகவும், இறைவனுக்கு மிக நெருக்கமானவராகவும், ஸ்ரீ வைகுண்ட நித்யாசுரா்களில் முதன்மையானவராகவும் ஆதிசேஷன் விளங்குகிறாா்.
அதனால் தான் பிரம்மோற்சவ வாகன சேவைகளில் ஆதிசேஷனுக்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வருடத்தில் இருமுறை பெரியசேஷ வாகனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கிறாா்.
