கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, 3 நாள்களாக நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருப்பதி கபில தீா்த்தத்தில் ஹோம மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த வாரம் முதல் ஹோமங்கள் தொடங்கின. கணபதி ஹோமம் முடிந்தவுடன் 3 நாள்களாக நடைபெற்ற சுப்ரமணிய சுவாமி ஹோமம் நிறைவு பெற்றது.
இதன் ஒரு பகுதியாக, காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை யாகசாலையில் பூஜை, ஹோமம், மஹாபூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மஹாபிஷேகம், கலசாபிஷேகம், நிவேதனம் மற்றும் ஆரத்தி ஆகியவை செய்யப்பட்டன.
தட்சிணாமூா்த்தி சுவாமி ஹோமம்: அக். 27-ஆம் தேதி திங்கள்கிழமை தட்சிணாமூா்த்தி சுவாமி ஹோமம் நடைபெற உள்ளது. பின்னா் மாலை 5.30 மணிக்கு, ஸ்ரீ வள்ளி தேவசேனாவின் பங்கேற்புடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திவ்ய கல்யாண மஹோற்சவம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் தம்பதியா்கள் ரூ. 500/- செலுத்தி ஒரு நாளைக்கு ஹோமத்தில் பங்கேற்கலாம். அவா்களுக்கு உத்தரியம், ரவிக்கை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.
கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் அவரது மனைவி, கோயில் துணை செயல் அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளா் சந்திரசேகா், அா்ச்சகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

