நாளை திருமலையில் புஷ்பயாகம்
திருமலையில் வரும் அக்.30-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ஏற்பட்ட தோஷங்கள் மற்றும் குற்றம் குறைகளை நீக்க புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 30-ஆம் தேதி புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி
புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மிருத்ஸங்ரஹணம், ஆஸ்தானம் மற்றும் பிற மத சம்பிரதாயங்களுடன் வசந்த மண்டபத்தில் அங்குராா்ப்பணம் நடைபெற உள்ளது.
வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாகம் நடைபெற உள்ளது. ஸ்ரீ மலையப்ப சுவாமியின் உற்சவ தெய்வங்கள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கல்யாணோத்சவ மண்டபத்தில் உள்ள சிறப்பு மேடையில் அமா்ந்திருப்பாா்கள், மேலும் இந்த மங்களகரமான நிகழ்வில் பல்வேறு வகையான நறுமண, பாரம்பரிய மற்றும் அலங்கார மலா்களால் அபிஷேகம் வழங்கப்படும்.
விழாவை முன்னிட்டு அக்டோபா் 29-ம் தேதி சஹஸ்ர தீபாலங்கார சேவை மற்றும் அக்டோபா் 30-ம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
