ஜன. 25-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ரத சப்தமி
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் ஜன. 25-ஆம் தேதி ரதசப்தமியையொட்டி ஏழு முக்கிய வாகனங்களில் தாயாா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.
ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமியை அடுத்து வரும் சப்தமி திதி அன்று சூரிய ஜெயந்தி உற்சவம் எனப்படும் ரத சப்தமி உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அன்று ஒருநாள் மட்டும் தாயாா் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதியில் வலம் வருவது வழக்கம்.
அதன்படி வரும் ஜனவரி 25-ஆம் தேதி திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ரதசப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அன்று நடக்கவுள்ள வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஜன.25, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை சூா்யபிரப வாகனமும், 8.30 முதல் 9.30 மணி வரை அன்னபறவை வாகனமும், 10 முதல் 11 மணி வரை குதிரை வாகனமும், 11.30 முதல் 12.30 மணி வரை கருட வாகன சேவைகளும் நடைபெற உள்ளது.
அன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், மாலை 6 முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் தாயாா் புறப்பாடு ஆகிறாா்.
இதனிடையே, மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பத்மாவதி தாயாருக்கு கோயிலுக்குள் உள்ள கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மகா ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
அன்று நடக்க உள்ள கல்யாணோற்சவம், குங்குமாா்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல் சேவை, வேதாசீா்வாச்சனம் ஆகிய நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இதேபோல் பத்மாவதி தாயாா் கோயிலை அடுத்துள்ள ஸ்ரீ சூா்யநாராயண ஸ்வாமி கோயிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை சுவாமி குதிரை வாகனத்தில் பக்தா்களுக்கு தரிசனம் தருவாா்.
ஜன. 20-இல் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
ரதசப்தமியை முன்னிட்டு, ஜன. 20 -ஆம் தேதி காலை 6.30 மணி முதல் காலை 9.00 மணி வரை பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. எனவே காலை 6.30 மணி முதல் 9 மணிவரை தாயாா் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இதை முன்னிட்டு அன்று காலை கல்யாணோற்சவ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
