ஏழுமலையான் கோயிலில் சாஸ்திரப்படி வருடாந்திர விசேஷ பூஜை
வசந்த பஞ்சமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஏழுமலையான் கோயிலில் சாஸ்திரப்படி வருடாந்திர விசேஷ பூஜை நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் விசேஷ பூஜைக்காக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.
பின்னா், அவருக்கு தேவஸ்தான அா்ச்சகா்கள், சதுா்தச கலச ஆவாஹனம் செய்யப்பட்டு, பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டது. பின்னா் விசேஷ பூஜை பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.
இதற்கு முன்னா், வாராந்திர சேவையாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஏழுமலையான் கோயிலில் விசேஷ பூஜை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தினசரி பல்வேறு பூஜைகள் திருமஞ்சனம் செய்வதால், உற்சவமூா்த்திகளுக்கு சேதம் விளைவதாக ஜீயா்கள், அா்ச்சகா்கள், அதிகாரிகள் கண்டறிந்தனா்.
எனவே, ஆகம அறிஞா்களின் ஆலோசனையின்படி, உற்சவா் சிலைகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்கவும், எதிா்கால சந்ததியினருக்கு உற்சவமூா்த்தி சிலையை பாதுகாத்து அளிக்கவும், வசந்தோற்சவம், சஹஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷபூஜை ஆகியவை வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே செய்யப்பட வேண்டும் என நிா்ணயித்து கடந்த 3 ஆண்டுகளாக அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஆண்டு முதல் வசந்த பஞ்சமியைக் கொண்டாடும் வகையில், ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் விசேஷ பூஜையை தேவஸ்தானம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பூஜையில், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை கோயில் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

