11 வட்டங்களில் ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 9 வட்டங்களில் புதன்கிழமை 1425-ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 9 வட்டங்களில் புதன்கிழமை 1425-ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் வருவாய்த் துறை தொடர்பான கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2016-ஆம் ஆண்டுக்கான (1425 பசலி ஆண்டு) வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் முகாம்கள் தொடங்கியது. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்பட், கீழ்பென்னாத்தூர், வெம்பாக்கம் ஆகிய 11 வட்டங்களில் இந்த ஜமாபந்தி தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான சா.பழனி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. விழாவில், வட்டாட்சியர் சி.பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் சி.முருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சரஸ்வதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் டி.கலைமணி, வேளாண் உதவி இயக்குநர் அக்கண்டராவ் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

முதல் நாளான புதன்கிழமை நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மேலும், இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, 20 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளும், 2 பேருக்கு பிறப்பு மற்றும் இறப்புச் சான்றுகளும் வழங்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

ஆரணி: ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் முதல் நாள் கண்ணமங்கலம் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் மனுக்களைப் பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தார்.

மேலும், தென்னை விவசாயிகளின் நலன் காக்க கொப்பரைத் தேங்காயை தமிழக அரசு நேரடி கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கு விதிக்கப்பட்டுள்ள மாநில மதிப்பு கூட்டுவரி 5 சதவீதத்தை ரத்து செய்து, லாபகரமான முறையில் விவசாயிகள் தேங்காயை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வலியுறுத்தி கையில் தேங்காய்களுடன் வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதில், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, ஆணையாளர் ரவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

செங்கம்: செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், ஜமாபந்தி அலுவலராக திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி கலந்துகொண்டார். முதல் நாளில் மேல்பள்ளிப்பட்டு பிர்காவுக்கு உள்பட்ட கிராம மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 360 மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியர் காமராஜ் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்யாறு: செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யாறு வட்ட வருவாய்த் தீர்வாயக் கணக்கு தணிக்கை தனித்துணை ஆட்சியர் ராணி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், தேத்துறை உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

ஜூன் 15, 16-ல் தேத்துறை உள்வட்டம், 17, 20-ல் அனக்காவூர் உள்வட்டம், 21, 22-ல் வடதண்டலம் மற்றும் வாக்கடை உள்வட்டம், 23, 24-ல் வாக்கடை மற்றும் செய்யாறு உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.

போளூர்: போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர் (கலால்) சு.பானு தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், போளூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த ஜமாபந்தி ஜூன் 15 முதல் 22-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு நடைபெறுகிறது.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி துணை ஆட்சியர் வெ.ஜோதி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட கிரமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த ஜமாபந்தி கூட்டம் ஜூன் 15 முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

வந்தவாசி: வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்தவாசி வட்டத்துக்கான ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும், மழையூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com