வேலூர் தடியடி சம்பவத்தைக் கண்டித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி ந


பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து, திருவண்ணாமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வேலூர் - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்த கல்லூரி முதல்வர் சின்னையா, திருவண்ணாமலை நகர போலீஸார் விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...