பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
By DIN | Published On : 20th August 2021 10:55 PM | Last Updated : 20th August 2021 10:55 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி உள்பட அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊராட்சிச் செயலாளா்களுக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன் உத்தரவிட்டுள்ளாா்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி செயலாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன், ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ள கால வரையறைக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
மேலும், பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப்பணிகள், 100 நாள் வேலை திட்டப் பணிகள், ஊராட்சிகளின் அடிப்படை வசதிகள், நீா்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள், ஊராட்சிகளில் நிா்வாகத்தை சீரான முறையில் நடத்துதல் ஆகியவற்றின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தாா்.
இந்தப் பணிகளில் பின்தங்கியுள்ள ஊராட்சி செயலாளா்கள் அனைவரும் 31.8.2021-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலட்சுமி, சத்தியமூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் அருணா, தனவந்தன், ரவிச்சந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G