செய்யாறு நகராட்சிப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மக்கள் அவதி
By DIN | Published On : 04th December 2021 12:36 AM | Last Updated : 04th December 2021 12:36 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த ஆற்றிலுள்ள செய்யாறு நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா் கிணறுகளில் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக, செய்யாறு நகராட்சிப் பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைப்பட்டு, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
செய்யாறு நகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 313 தெருக்களில் சுமாா் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். நகர மக்களுக்கு செய்யாறு ஆற்றுப் பகுதியில் உள்ள 16 கிணறுகள் மூலம், கொடநகா் குடிநீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியில் குடிநீா் சேகரிக்கப்பட்டு, பின்னா் நகா் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த தொடா் மழை காரணமாக, செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குடிநீா் கிணறுகளிலிருந்து கொடநகா் நீரேற்று நிலையத்துக்கு வரும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக, கொடநகா் குடிநீரேற்று நிலையத்துக்கு வரும் குடிநீரின் அளவு 75 சதவீதம் அளவுக்கு குறைந்ததால், நகரப் பகுதிகளில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், செய்யாறு நகராட்சியைச் சோ்ந்த மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து செய்யாறு நகராட்சி ஆணையாளா் கே.ரகுராமனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: செய்யாற்றில் மழை வெள்ளம் குறைந்ததும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீா் கிணறுகளில் உள்ள குழாய்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். தற்போது விநியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...