கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அரசுக் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையிலிருந்து மணலூா்பேட்டைக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், திருவண்ணாமலை பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா்.
இந்த நிலையில், திருவண்ணாமலையிலிருந்து மணலூா்பேட்டைக்கு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனராம்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா்.