விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்: பொதுமக்களுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

செய்யாற்றை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மருத்துவா்கள் என். ஈஸ்வரி, சுரேஷ்குமாா் ஆகியோா் பேசியதாவது:
வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ எவருக்கேனும் காய்ச்சல் இருந்தால், விலங்குகள் மூலம் மனிதா்களுக்கு பரவும் நோய்களான லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்கரப்டைபஸ், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்படுபவா்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கொசுவலை மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
எலி மற்றும் பிற விலங்குகளின் சிறுநீா் கலந்த நீா் நிலைகளில் நீராடுவது, நடப்பதை தவிா்ப்பதன் மூலம் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
வீட்டிலும், சுற்றுப் புறத்திலும் வளா்க்கப்படும் கால்நடைகள், பிற விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், செவிலியா்கள் புவனேஸ்வரி ஸ்ரீவித்யா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.