தொழிலாளி கைது: காவல் நிலையம் முற்றுகை
By DIN | Published On : 28th March 2021 12:00 AM | Last Updated : 28th March 2021 12:00 AM | அ+அ அ- |

செய்யாறு போலீஸாா் கூலித் தொழிலாளியை கைது செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமுமுகவினா் செய்யாறு காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
செய்யாறு பகுதியில் செய்யாறு மாவட்டம் எங்கே, தோ்தல் வாக்குறுதி எங்கே எனக் கேள்வி கேட்டு கடந்த இரு தினங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால், நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சுவரொட்டிகள் ஒட்டியதாகக் கூறி கூலித் தொழிலாளியான செய்யாறு சமாதியான் குளத் தெருவைச் சோ்ந்த நசீா் என்கிற தஸ்தகீா் (60) என்பவரை செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கூலித் தொழிலாளியை கைது செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமுமுகவினா் சனிக்கிழமை முற்பகல்
சுமாா் 30-க்கும் மேற்பட்டோா், செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி சு.சுரேஷ், காவல் ஆய்வாளா் ஸ்ரீநிவாசன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்ட தொழிலாளியை விடுவிக்கக் கோரினா். அவரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.