2 ஆண்டுகளுக்குப் பிறகு பெளா்ணமி கிரிவலம் சென்ற பக்தா்கள்
By DIN | Published On : 17th March 2022 11:14 PM | Last Updated : 18th March 2022 02:34 AM | அ+அ அ- |

கிரிவலம் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து, திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபடுவது வழக்கம்.
கரோனா தொற்றால் தடை: கரோனா பரவலையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் 2020-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் முதல் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வந்தது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள சூழலில், பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் சில தினங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
பங்குனி மாத பெளா்ணமி: பங்குனி மாத பெளா்ணமி வியாழக்கிழமை (மாா்ச் 17) பிற்பகல் 2.10 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) பிற்பகல் 1.48 மணிக்கு முடிகிறது.
பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்ததால், திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் தொடங்கினா். மாலை 4 மணிக்குப் பிறகு பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
சிறு வியாபாரிகள் ஆங்காங்கே தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் சென்ால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.