சேவூா்-அடையபலம் சாலையில் தேங்கிய மழைநீா்
ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் சேவூா்-அடையபலம் சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சேவூா்-அடையபலம் சாலையில் சுமாா் ஒரு கி.மீ தொலைவுக்கு மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இந்தச் சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், இரு, நான்கு சக்கர வாகனங்கள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனா். இதுதொடா்பாக, அடையபலம் ஊராட்சித்தலைவா், ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, தன்னாா்வலா்கள் கூறியதாவது: சேவூா்-அடையபலம் சாலையின் குறுக்கே ஏரிக்கால்வாய் செல்கிறது. இதற்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சாலையை விட உயரமாக உள்ளதாலும், பாலத்தின் பக்கவாட்டில் தண்ணீா் செல்வதற்கு வழியில்லாததால் மழைநீா் தேங்கி நிற்கிறது. எனவே, இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றாா்.

