கூட்டாய்வுக்கு உள்படுத்தாத வாகனங்களை இயக்க அனுமதியில்லை: திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டாய்வுக்கு உள்படுத்தாத தனியாா் பள்ளி வாகனங்கள் பொதுச் சாலையில் இயக்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்தாா்.

தமிழகம் முழுவதும் பள்ளிப் பேருந்துகளை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டாய்வுக்கு உள்படுத்தி தகுதிச்சான்றிதழ் பெறுவது வழக்கம். அதன்படி, தகுதிச்சான்றிதழ் பெற்ற வாகனங்களை மட்டுமே சாலையில் இயக்க வேண்டும் என்பது விதி.

திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களும் மாவட்ட அளவிலான கூட்டாய்வுக் குழுவினரால் வியாழக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் முன்னிலையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஆய்வின்போது, அனைத்து பேருந்துகளுக்கும் அனுமதிச் சீட்டு, நடப்பில் உள்ள காப்பீட்டுச் சான்றிதழ், நடப்பு புகைச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். மேலும், நடப்பு சாலை வரி மற்றும் தரமான வாகனம் என்று நடப்பில் உள்ள தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே பொதுச் சாலையில் வாகனங்களை இயக்க வேண்டும். கல்வி நிலையப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் சீருடையில் இருக்க வேண்டும்.

மோட்டாா் வாகனச் சட்டம் மற்றும் விதிகளுக்குள்பட்டு பள்ளிப் பேருந்துகளை இயக்க வேண்டும். வாகனத்தின் முன் பக்கம், மற்றும் பின்பக்கம் கேமராக்கள் பொருத்த வேண்டும். வாகனத்தின் உள்புறம் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த வேண்டும். கூட்டாய்வுக்கு உள்டுத்தாத பள்ளி வாகனங்கள் பொதுச் சாலையில் இயக்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com