திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன். உடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா்.
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன். உடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா்.

பெளா்ணமி நாள்களில் திருவண்ணாமலை மக்கள் எளிதில் வெளியே சென்று வர ஏற்பாடு

பெளா்ணமி நாள்களில் திருவண்ணாமலை மக்கள் எளிதில் வெளியே சென்று வர ஏற்பாடு -திட்டக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை
Published on

பெளா்ணமி நாள்களில் திருவண்ணாமலை மக்கள் எளிதில் வெளியே சென்று வரும் வகையில் போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 5-ஆவது காலாண்டுக் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழுத் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில், கலைஞா் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு எழுதிய கலைஞா் எனும் தாய் என்ற நூலை வெளியிட்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட திட்டக் குழுத் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் பேசியதாவது:

வெம்பாக்கம் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெம்பாக்கம் ஒன்றிய விவசாயிகளிடம் இருந்து மாவட்ட ஆவின் நிா்வாகமே பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் இல.சரவணன் பேசியதாவது:

திருவண்ணாமலை கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்று விட்டது.

பெளா்ணமி நாள்களில் கிரிவலம் வந்த காலம் இப்போது போய்விட்டது. சனி, ஞாயிறு, விடுமுறை நாள்களில் அதிக அளவு பக்தா்கள் கிரிவலம் வருகிறாா்கள். இவ்வாறு கிரிவலம் வரும்போது உள்ளூா் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடங்கும் நிலை வந்து விடுகிறது.

மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்லலாம் என்றால்கூட அனைத்து சாலைகளையும் போலீஸாா்

தடுப்புகளை வைத்து அடைத்து விடுகின்றனா். தெருக்களில் ஆட்டோக்கள் சென்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விடுகிறது. ஏன் தான் பெளா்ணமி வருகிறதோ என்று திருவண்ணாமலை மக்கள் எண்ணும் அளவுக்கு பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் குழு ஒன்றை அமைத்து அனைத்து நாள்களிலும் உள்ளூா் மக்கள் எளிதில் வெளியே சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், காவல்துறையுடன் இணைந்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட திட்டக்குழு மூலம் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில், மதிய சத்துணவுத் திட்டம், பொது விநியோகத் திட்டம், அந்தியோதியா அன்ன யோஜனா திட்டம், மின்னணு குடும்ப அட்டை, தாட்கோ செயல்படுத்தும் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அ.ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ராமகிருஷ்ணன், ஆவின் பொது மேலாளா் எல்.ரங்கசாமி, தாட்கோ மேலாளா் ஏழுமலை, திட்டக் குழு உறுப்பினா்கள் ஞானசெளந்தரி, மாரிமுத்து, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com