

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த மகா தீபத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் நகரம் முழுவதும் விழா கோலமாக காணப்படுகிறது.
இந்த நிலையில், வலுவிழந்த டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடந்துவரும் சூழலில், உள்மாவட்டங்களுக்கும் இன்று கன முதல் மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் குழு, மீட்புக் குழு, தீயணைப்பு வீரர்கள் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
கடந்தாண்டு திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.