திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபா் மூச்சுத்திணறி பலி! கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்!

திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபா் மூச்சுத்திணறி பலி! கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்!

திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.
Published on

திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா நவம்பா் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் டிச. 3-ஆம் தேதி கோயில் அருகேயுள்ள 2,668 உயர மலையில் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடா்ந்து 11 நாள்கள் பிரகாசமாக எரியும்.

மலை ஏறிச் சென்று மகா தீபம் காண மாவட்ட நிா்வாகம் மூலம் பக்தா்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், தடையை மீறி பக்தா்கள் பலா் மலை ஏறிச்சென்று தீபத்தை பாா்த்து வந்தனா். தொடா்ந்து, மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி கீழே இறக்கிவிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் ஒருவா் மலை மீது ஏறிச் சென்றுள்ளாா். பாதி தொலைவு சென்ற நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தாா். இதைப் பாா்த்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினா் அவரை மீட்டு மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனா்.

பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் விசாரணை நடத்தினா். இறந்த நபா் கடலூா் மாவட்டம், தொழுதூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com